குறள் - 0147
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
பிறனில் விழையாமை - Not Coveting another's Wife
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
மு.வ உரை:
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
பரிமேலழகர் உரை
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்= அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்;
பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்= பிறனுக்குரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண்தன்மையை விரும்பாதவன்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஆன் உருபு இங்கு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறம் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.
கருணாநிதி உரை:
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
Couplet:
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
Explanation:
Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.
No comments