Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0143

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

மு.வ உரை:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

பரிமேலழகர் உரை

தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்= தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவம் செய்தலை விரும்பி ஒழுகுவார்;

விளிந்தாரின் வேறு அல்லர்= உயிருடையவரேனும் இறந்தாரே யாவர்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

அறம் பொருள் இன்பங்களாகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்' என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவுபற்றி யாகலின் 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.

கருணாநிதி  உரை:
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.

Couplet:
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

Explanation:
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

No comments