குறள் - 0139
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
ஒழுக்கமுடைமை - The Possession of Decorum
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
மு.வ உரை:
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
வழுக்கியும் தீய வாயால் சொலல்= மறந்துந் தீயசொற்களைத் தம் வாயாற் சொல்லும் தொழில்கள்;
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா= ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தீயசொற்களாவன: பிறர்க்குத் தீங்குபயக்கும் பொய்ம் முதலியனவும், வருணத்திற்கு உரியஅல்லனவும் ஆம். அவற்றது பன்மையாற் சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொலல்' சாதியொருமை. சொல்லெனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். நல்லசொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.
கருணாநிதி உரை:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
Couplet:
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
Explanation:
It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill.
No comments