மகிழ்ச்சியும் வெற்றியும்
*வெற்றியும் மகிழ்ச்சியும் இரு கண்கள்*
இவை இரண்டும் அதிர்ஷ்டத்தால் வருவதல்ல.... நீடித்த அக்கறையான செயல்களினால் நாம் உருவாக்குவது வெற்றியும் மகிழ்ச்சியும்.
இவை இரண்டும் அதிர்ஷ்டத்தால் கிடைத்தால் என்றும் நிலைக்காது.
சரி... இவை இரண்டையும் இனி நாம் பெறப்போகிறோம்.. இவற்றை தவறாது கடைபிடித்தால்...!!!
நாம் என்ன நினைக்கிறோம், செய்கிறோம் என்பதைப் பொருத்தே நம் வாழ்வு அமையும். எதையும் நன்கு செய்ய வேண்டும். சரிவரச் செய்ய பழக வேண்டும். இது தான் அரிஸ்டாட்டிலின் சித்தாந்தம். உலகம் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த மாறுதலின் வேகத்திற்கேற்ப அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டை நாம் பின்பற்றினால் நாளை நமதே...வெற்றியும் நமதே... இது காலம் கடந்து நிற்கும்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
அப்துல் கலாம் சொல்வது போல் கனவு காண வேண்டும். நம் லட்சியம் என்னவென்று மனதில் தீட்டி அதை மனக்கண் முன்பு நிறுத்தி வெற்றி பெற்றதாக நினையுங்கள். படமாக அதை மனக்கண் முன்பு ஒட்டுங்கள். லட்சியங்களை தாளில் எழுதி அவற்றை அடைந்துவிட்டதாக நினையுங்கள்.
லட்சியங்களை அடையக் கூடிய பாதையில் பல தடைகள் ஏற்படலாம். அவைகளை தடைகளாக, பிரச்சனைகளாக கருதாமல் சவால்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களென அவற்றை எதிர்நோக்கிப் போராடுங்கள். இதற்காக உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை பெருக்கிக் கொள்ள வேண்டும். நெருக்கடி காலத்தில் இவைகள் உங்களுக்கு உதவும், போராட வலிமை சேர்க்கும்.
வெற்றி கண்டவர்கள் கூறுவதென்ன?
எது அவர்களின் பலஹீனம், எது அவர்களின் வலிமையென்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே நம் வலிமையென்ன என்று தெரிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் ஆழ்மனதின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். அதன் வழி நடக்க வேண்டும். நல்வழி கிடைக்கும். அது நம்மை வெற்றிப்பாதையில் அமர்த்தும்.
இதற்கு தூக்கம் மிகவும் அவசியம். நல்ல தூக்கம் நம் உடல்நலத்தை மேம்படுத்தும். எனவே இரவில் வெகுநேரம் கண்விழிக்கக் கூடாது. இயற்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் 9 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இரவுக் காட்சிகள், கேளிக்கைகள், நடுநிசி படிப்பு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தூக்கம் இதயத்திற்கும், உடலுக்கும் நல்லது. நல்ல, ஹார்மோன்கள் சுரந்து மூளை நன்கு வேலை செய்யும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மனதில் வேகம் பிறக்கும்.
அடுத்து நிறையப் படிக்க வேண்டும். Positive Thoughts நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிடித்தமான நாவல், கதைகள், நல்ல சிந்தனைகளை தூண்டக்கூடிய புத்தகங்களைப் படியுங்கள். நம் ஆடை நம்மை எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் என்பது ஷேக்ஸ்பியர் வாக்கு. மனதிற்குப் பிடித்த, உடலுக்கேற்ற கச்சிதமான பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும். காண்பவரைக் கவரும் வண்ணத்தில் இருந்தாலே போதும். நாம் பாதிப்பணியை முடித்து விடலாம்.
நன்கு பேசுங்கள், குரல் கணிரென்று ஒலிக்க, வார்த்தைகள் சரளமாக வெளிவர, கேட்பவர்கள் நமக்கு அடிமையாகிவிடுவர். இனிமையாக, கனிவாக, பணிவுடன் பேசுங்கள். உலகத்தில் பெரும் வெற்றி கண்டவர்கள் நன்கு பேசத் தெரிந்தவர்கள் தாம். நீங்கள் பெரிய மேடைப் பேச்சாளராக வேண்டுமென்பதில்லை. பிறருடன் பேசிப் பழகும் பொழுது உங்கள் தொனியில், வார்த்தைகள் கனிவும், பண்பும் இருந்தாலே போதும். வெற்றியின் ரகசியம் இது தான்.
வாழ்க்கையில் நாம் எவ்வளவு நபர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம்... எல்லாரும் நல்லவர்களும் இல்லை வஞ்சகருமில்லை. நல்லது, கெட்டது கலந்தவர்கள் தான். எனவே பகைமை பாராட்டாதீர்கள். மனதில் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது. இவைகள் நம் ஆக்க சக்தியை அழித்து விடும். உடல் நலத்தை பாதிக்கும். ஏன் இதயமே பலஹீனப்படும்.
எனவே நல்லதைப் பாருங்கள், கேளுங்கள். தீயவற்றை மனதிலிருந்து அகற்றி விடுங்கள். இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். தேக ஆரோக்கியமும் மேம்படும் மகிழ்ச்சியும் பொங்கும்.
No comments