Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0187

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

மு.வ உரை:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

பரிமேலழகர் உரை

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்= தம்மை விட்டு நீங்குமாற்றாற் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்;

நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர்= கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பாடலை அறியாதார்.

பரிமேலழகர் உரை விளக்கம்

சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பர் என்ற கருத்தான், அயலாரோடும் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. அறிதல் தமக்குறுதி என்று அறிதல். "கடியு- மிடந் தேற்றாள் சோர்ந்தனள் கை" (கலித்தொகை, மருதம்- 27) என்புழிப் போலத் தேற்றாமை தன்வினையாய் நின்றது. புறங்கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.

கருணாநிதி  உரை:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

Couplet:
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

Explanation:
With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.

No comments