குறள் - 0119
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
நடுவு நிலைமை - Impartiality
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
மு.வ உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
பரிமேலழகர் உரை
செப்பம் சொல் கோட்டம் இல்லது= நடுவுநிலைமையாவது, சொல்லின்கட் கோடுதல் இல்லாததாம்;
உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின்= அஃது அன்னதாவது, மனத்தின்கட் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'சொல்' ஊழான் அறுத்துச் சொல்லும் சொல். காரணம்பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம் எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவுநிலைமை அன்று என்பது பெறப்பட்டது.
கருணாநிதி உரை:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
Couplet:
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
Explanation:
Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.
No comments