குறள் - 0108
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மு.வ உரை:
ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
பரிமேலழகர் உரை:
நன்றி மறப்பது நன்று அன்று= ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறனன்று;
நன்றல்லது அன்றே மறப்பது நன்று= அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன்.
பரிமேலழகர் உரை
விளக்கம்:
இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்டவழி மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.
கருணாநிதி உரை:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.
Couplet:
It is not good to forget a benefit; it is good to forget an
injury even in the very moment (in which it is inflicted).
Explanation:
'Tis never good to let the thought of good things done thee
pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very
day.

No comments