குறள் - 0095
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப்
பிற.
மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
பரிமேலழகர் உரை:
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலனாதல்= ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சி உடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்;
பிறஅல்ல= இவை யிரண்டுமன்றி மெய்க்கணியும் பிற அணிகள் அணியாகா.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசைநிலை. வேற்றுமை உடைமையாற் 'பிற' வெனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் அல்லவெனவுங் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப்பயன் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.
Couplet:
Humility and sweetness of speech are the
ornaments of man; all others are not (ornaments).
Explanation:
Humility with pleasant speech to man on
earth,
Is choice adornment; all besides is
nothing worth.

No comments