குறள் - 0093
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
மு.வ உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
பரிமேலழகர் உரை:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி= கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி;
அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்= பின் நண்ணியவழி மனத்துடனாகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணே அறம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'நோக்கி' என்னும் வினையெச்சம் இன்சொலென அடையடுத்து நின்ற முதனிலைத் தொழிற்பெயர் கொண்டது. ஈதலின் கண்ணதன்று என்றவாறு.
இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடுகூடிய இன்சொல் முன்னரே பிணித்து்க் கோடலின் விருந்தோம்புதற்கட் சிறந்ததென்பது கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
Couplet:
Sweet speech, flowing from the heart (uttered)
with a cheerful countenance and a sweet look, is true virtue.
Explanation:
With brightly beaming smile, and kindly light of
loving eye,
And heart sincere, to utter pleasant words
is charity.

No comments