Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0082

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

மு. உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

பரிமேலழகர் உரை: 
(இதன்பொருள்) சாவா மருந்தெனினும் = உண்ணப்படும் பொருள் அமிர்தமேயெனினும்;
விருந்து புறத்ததாத் தான் உண்டல் = தன்னை நோக்கிவந்த விருந்து தன்னில்லின் புறத்ததாகத் தானே உண்டல்;
வேண்டற்பாற்று அன்று = விரும்புதன் முறைமை யுடைத்ன்று.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
சாவாமருந்து சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. விருந்தின்றியே ஒருகாற் றானுண்டலைச் சாவா மருந்தென்பார் உளராயினும் அதனையொழிகவென் றுரைப்பினுமமையும்.
இவை யிரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

Translation:
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

Explanation:
Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.


No comments