Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0065

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

மு. உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) உடற்கின்பம் மக்கள் மெய் தீண்டல் = ஒருவன் மெய்க்கின்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;
செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் = செவிக்கின்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'மற்று' வினைமாற்று.
மக்களது மழலைச் சொல்லேயன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் சொல்லென்றார்.
'தீண்டல்' 'கேட்ட' லென்னுங் காரணப்பெயர்கள் ஈண்டு்க் காரியங்களின் மேனின்றன.

கருணாநிதி  உரை:
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

Couplet:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

Explanation:
To patent sweet the touch of children dear; 
Their voice is sweetest music to his ear.


No comments