குறள் - 0041
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இல்வாழ்க்கை - Domestic Life
இல்வாழ்வான் என்பான்
இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற
துணை.
மு.வ உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) இல்வாழ்வான் என்பான் =
இல்லறத்தோடு கூடி வாழ்வானென்று சொல்லப்படுவான்;
இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை =
அறவியல்பினையுடைய ஏனை மூவர்க்கும்,
அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.
பரிமேலழகர் உரை
விளக்கம்:
'இல்' லென்பது ஆகுபெயர்.
'என்பா' னெனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது.
ஏனைமூவராவார், ஆசாரியனிடத்தினின் றோதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கட் டீயொடுசென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்யு மொழுக்கத்தானும், முற்றத்துறந்த யோகவொழுக்கத்தானுமென இவர்; இவருள் முன்னையிருவருரையும் பிறர்மதமேற்கொண்டு கூறினார்.இவர், இவ்வொழுக்கநெறிகளை முடியச்செல்லுமளவும் அச்செலவிற்குப் பசி நோய் குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய வுதவி அவ்வவ் நெறிகளின் வழுவாமற் செலுத்துதலான், 'நல்லாற்றின் நின்ற துணை' யென்றார்.
கருணாநிதி உரை:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
Couplet:
He will be called a (true) householder, who is a
firm support to the virtuous of the three orders in their good path.
Explanation:
The men of household virtue, firm in way of
good, sustain The other orders three that rule professed maintain.
No comments