Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0024

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

மு.வ உரை:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால் பொறிகளாகிய யானை ஐந்தனையும் தத்தம் புலன்கள்மேற் செல்லாமற் காப்பான்;

வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = எல்லா நிலத்தினும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம்.

பரிமேலழகர் உரை விளக்கம்:

இஃது ஏகதேச உருவகம்.

'திண்மை' ஈண்டு அறிவின் மேற்று.

அந்நிலத்திற் சென்று முளைத்தலின் 'வித்து' என்றார்; ஈண்டுப்பிறந்து இறந்து வரும் மகன்அல்லன் என்பதாம்.

கருணாநிதி  உரை:
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி,
நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

Couplet:
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

Explanation:
He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.

No comments