Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0017

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


வான் சிறப்பு - The Blessing of Rain

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் = அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும்;
எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் = மேகந்தான் அதனைக் குறைத்து அதன்கட் பெய்யாது விடுமாயின்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
உம்மை சிறப்பும்மை.
தன்னியல்பு குறைதாலாவது, நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணிமுதலாயின படாமையும் ஆம்.
ஈண்டுக் 'குறைத்தல்' என்றது முகத்தலை. அது "கடல் குறை படுத்தநீர் கல் குறைபடவெறிந்து" (பரிபாடல்-20) என்பதானானும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம்.
இவை ஏழு பாட்டானும் உலக நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

Couplet:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

Explanation:
If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain.

No comments