குறள் - 0101
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
பரிமேலழகர் உரை
செய்யாமல் செய்த உதவிக்கு= தனக்கு முன்னோர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு;
வையகமும் வானகமும் ஆற்றல் அரிது= மண்ணுலகும் விண்ணுலகுங் கைமாறாகக் கொடுத்தாலும் ஒத்தல்அரிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கைம்மாறுகள் எல்லாம் காரணம் உடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின.
'செய்யாமைச் செய்த உதவி'யென்று பாடமோதி, மறித்து உதவமாட்டாமை உள்ளவிடத்துச் செய்த உதவி என்று உரைப்பாரும் உளர்.
கருணாநிதி உரை:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
Couplet:
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
Explanation:
Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.

No comments