குறள் - 0073
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை - The Possession of Love
அன்போடு இயைந்த
வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த
தொடர்பு.
மு.வ உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு = பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடுண்டாகிய தொடர்ச்சியினை;
அன்போடு இயைந்த வழக்கு என்ப = அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
பிறப்பினதருமை பிறந்தவுயி்ர் மேலேற்றப்பட்டது. 'இயைந்த' வென்பது உபசாரவழக்கு. 'வழக்கு' ஆகுபெயர். உடம்போடியைந்தல்லது அன்புசெய்யலாகாமையின், அது செய்தற்பொருட்டு இத்தொடர்ச்சி யுளதாயிற்றென்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை யென்றாயிற்று.
கருணாநிதி உரை:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.
Couplet:
They say that the union of soul and body in man is the
fruit of the union of love and virtue (in a former birth).
Explanation:
Of precious soul with body’s flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

No comments