Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0043

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இல்வாழ்க்கை - Domestic Life

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
 ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

மு. உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்ற = பிதிரர் தேவர் விருந்தினர் சுற்றத்தார் தானென்று சொல்லப்பட்ட;
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை = ஐந்திடத்துஞ் செய்யும் அறநெறியை வழுவாமற் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கிடம் தென்றிசையாதலின், தென்புலத்தாரென்றார்.
தெய்வமென்றது சாதியொருமை.
விருந்தென்பது புதுமை; அஃது ஈண்டாகுபெயராய்ப் புதியராய் வந்தார்மேனின்றது; அவர் இருவகையர்: பண்டறிவுண்மையிற் குறித்துவந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாருமென.
ஒக்கல் சுற்றத்தார்.
எல்லாவறங்களும் தானுளனாய் நின்று செய்யவேண்டுதலின், தன்னை யோம்பலும் அறனாயிற்று.
'என்ற' வென்பது விகாரமாயிற்று.
'ஆங்கு' அசை.
ஐவகையும் அறஞ்செய்தற்கிடனாகலின் 'ஐம்புல' மென்றார்.
அரசனுக்கு இறைப்பொருள் ஆறிலொன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறுவேண்டுதலானென்ப தறிக.

கருணாநிதி  உரை:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

Couplet:
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.

Explanation:
The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity.


No comments