Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0039

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 

 புறத்த புகழும் இல.

மு.வ உரை:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அறத்தான் வருவதே இன்பம் = இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது;
மற்ற எல்லாம் புறத்த = அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினுந் துன்பத்தினிடத்த;
புகழும் இல = அதுவேயுமன்றிப் புகழும் உடையனவல்ல.
பரிமேலழகர் உரை விளக்கம்:
ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது; தூங்கு கையா னோங்கு நடைய"(புறநானூறு, 22) என்புழிப்போல.
இனபம் காமநுகர்ச்சி; அஃதாமாறு காமத்துப்பாலின் முதற்கட் சொல்லுதும்.
இன்பத்திற் புறம் எனவே துன்பமாயிற்று.
பாவத்தான் வரும் பிறனில்விழைவு முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றுமாயினும் பின் துன்பமாய் விளைதலின் புறத்த என்றார்.
அறத்தோடு வாராதன புகழுமில எனவே, வருவது புகழுடைத்தென்பது பெற்றாம்.
இதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

சாலமன் பாப்பையா உரை:

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

Couplet:

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

Explanation:

What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light.


No comments