Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0037

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 

 பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

மு.வ உரை:

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா;
சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
பயனை ஆறு என்றார், பின்னதாகலின்.
என என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவையும், பொறுத்தானோடு ஊர்ந்தானிடை என்றதனாற் காட்சியளவையும் பெற்றாம்.
உணரப்படு்ம் என்பது சொல்லெச்சம்.
இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

கருணாநிதி  உரை:

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

Couplet:

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

Explanation:

Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear!

No comments